பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று விமானத்தில் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.
அவரை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோர் முறைப்படி வரவேற்கின்றனர். இதன்பின் அவர்கள் இருவரும் வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கின்றனர்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, அமெரிக்கா முழுவதும் நியூயார்க் உள்பட 20 பெரிய நகரங்களில் இந்திய-அமெரிக்கர்கள் ஒன்று திரண்டு, அவரை வரவேற்கும் வகையில் ஒற்றுமை பேரணியை நடத்தினர்.
அவர்கள் பேரணியின்போது, மோடி மோடி, வந்தே மாதரம் மற்றும் வந்தே அமெரிக்கா உள்ளிட்ட கோஷங்களையும் எழுப்பியபடி சென்றனர். இந்த பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அப்போது அவர்களில் சிலர், ஹர் ஹர் மோடி என்ற பாடலுக்கு நடனம் ஆடியபடியும் சென்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருந்து பொருட்களை வழங்கி உதவியது, கொரோனா தடுப்பூசி பல்வேறு நாடுகளுக்கு வழங்கியது உள்பட சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் அமெரிக்காவில் இந்தியாவின் நன்மதிப்பு உயர்ந்து காணப்படுகிறது.