ஊழல், மோசடிகள் மூலம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை மீளக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுஜன பெரமுணவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்
ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் இன்று(21.06.2023) கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
‘‘பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் மூலம் வெளிநாடுகளின் வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை மீள நாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஊழல் தடுப்புச் சட்டத்தில் முறைமை இல்லை.
பாரியளவிலான மோசடிகள் அல்லது ஊழல்கள் இடம்பெறும் பட்சத்தில் அந்தப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்படுகின்றது.
அவ்வாறு மோசடி செய்யப்படும் பணத்தை மீண்டும் நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பதே முதன்மையான தேவையாகும். இதனை இலங்கை தனித்து செய்ய முடியாது.
அதற்காக சர்வதேச அமைப்புகளுடன் கைகோர்க்க வேண்டும். ஊழல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது.
அந்தச் சட்டத்திற்குத் தேவையான பலத்தை அளிக்கும் வகையில், சர்வதேச நிறுவனங்களின் ஆதரவைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் சேர்க்க வேண்டும்.” என ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.