அத்தியவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான நிதி பிரச்சினைக்கு தமது அமைச்சு தீர்வுகாண தவறினால், தான் அமைச்சு பதவியில் இருந்து விலகி விடுவேன் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.இலங்கையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட இரண்டு பிரதான விடயங்கள் காரணமாக அமைந்துள்ளன.
மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் இருக்கின்றன. அந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.
மருந்துகளுக்கான நிதி ஒதுக்கீடு செயற்பாடுகளை திருத்த முடிவு செய்து, அதற்கு அமைச்சரவையின் அனுமதியையும் பெற்றுக்கொண்டோம்.
எனினும் இந்த செயற்பாட்டின் ஊடாக மருந்து கொள்வனவு செய்யப்படுவதை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் அந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இப்படியான நடவடிக்கைகள் காரணமாக இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மருந்துகளை கொள்வனவு செய்யவதற்கு தேவையான நிதியை நிதியமைச்சிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது போனால், நான் அமைச்சு பதவியில் இருந்து விலகுவேன் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.