உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பானது 50 மில்லியனுக்கும் அதிகமான வங்கி வைப்பாளர்களின் எந்தவொரு வைப்புத் தொகைக்கோ அதற்கான வட்டிக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டச் செயலாளரின் நிர்வாக கட்டடத் தொகுதியான ‘லக்சியனே மாளிகையை’ மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (27.06.2023) பிற்பகல் இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கம்பஹா மாவட்ட மக்களுக்கு வினைத்திறன் மற்றும் முறையான அரச சேவையை வழங்கும் நோக்கில், ஏழு மாடிகளைக் கொண்ட நிர்வாகத் தொகுதிக்காக சுமார் நான்காயிரம் மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் 2022ஆம் ஆண்டின் இறுதியில், இலங்கையின் மொத்த அரச கடன் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) 83,700 மில்லியன் டொலர்களாகும்.
இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 128.3% ஆகும். 2022ஆம் ஆண்டின் இறுதியில், மொத்த வெளிநாட்டுக் கடன் தொகை 41,500 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 63.6% ஆகும். அப்போது மொத்த உள்நாட்டுக் கடன் தொகை 42,100 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 64.6% ஆகும்.
நாட்டின் கடனை மறுசீரமைக்காமல் பேணினால், 2035ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100%இற்கும் அதிகமான அரச கடன் இருக்கும். வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் நாட்டின் கடனை மறுசீரமைக்க ஏற்கனவே உடன்பட்டுள்ளனர்.
இலங்கையில் கடன் நிலைத்தன்மையை உருவாக்குவதற்கு, கடன் மறுசீரமைப்பு அவசியமானது மற்றும் உள்நாட்டு கடனும் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
எதிர்வரும் 5 வருடங்களில் மாத்திரம் 17 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடன் வழங்குநர்களிடமிருந்து பெறப்படும்.