போராட்டம் நடத்திய விசேட தேவையுடைய நபருக்கு இடையூறு விளைவித்த பொலிஸ்
பொருளாதார உதவி தேவைப்படும் மக்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கக் கோரி போராட்டம் நடத்திய விசேட தேவையுடைய நபருக்கு உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் இடையூறு விளைவித்து மோசமாக நடந்துகொள்ளும் சம்பவம் ஒன்று காணொளி ஒன்றில் பதிவாகியுள்ளது.
ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்கும் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு உலக வங்கி 200 மில்லியன் டொலர்களை அங்கீகரித்த அதே நாளில் இதே சம்பவம் நடந்தது.
மேலதிகமாக பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், அபாயத்தை எதிர்க்கும் தன்மையை அதிகரிப்பதற்கும் வரவு – செலவுத் திட்டத்துக்கு தேவையான நிதியை வழங்கும் வகையிலும், உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கவுள்ளது.
கடந்த வருடம் 25 இலட்சம் பேர் ஏழைகளாக மாறியதாக மதிப்பிட்டுள்ள உலக வங்கி, 2023ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை மேலும் 2.4 சதவீதம் உயரும் என்று கணித்துள்ளது.
மன்னார்-வவுனியா பிரதான வீதியின் கணேசபுரம் பகுதி மக்கள் கடந்த ஜூன் 28ஆம் திகதி தமது பெயர்களை “அஸ்வெசும” நலன்புரிப் திட்டத்தில் இருந்து நீக்கிவிட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் சிலர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் வீதியை திறக்க வந்த பறையனாலம் குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, போராட்டத்தில் பங்கேற்ற விசேட தேவையுடைய ஒருவரின் நாற்காலியை தூக்கியெறிந்ததை மாகாண ஊடகவியலாளர்கள் கமெராவில் பதிவு செய்துள்ளனர்.
வீதியோரத்தில் உட்கார வைக்காமல் தான் அமர்ந்திருந்த நாற்காலியை பொலிஸார் வீசி எறிந்தது ஏன் என விஷேட தேவையுடைய பாதிக்கப்பட்ட வயதான குறித்த நபர் கேள்வி எழுப்பியுள்ளார்.