காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை மற்றும் நகரப் பகுதிகளில் காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.
உதாரணமாக, பெங்களூர் தக்காளி ஒரு கிலோ 145 ரூபாய்க்கும், நாட்டு தக்காளி ஒரு கிலோ 115 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 170 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், காரட் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது.
இதன் காரணமாக பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் காய்கறி செலவு மட்டும் மும்மடங்கு உயர்ந்துள்ளது.
ஆனால், தி.மு.க. அரசோ தக்காளி மட்டும் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு குறைந்த ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட அளவு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்து இருப்பது வியப்பாக உள்ளது.
பொதுவாக காய்கறிகள் விலை உயர்வுக்கு விளைச்சல் குறைவு, வரத்துக் குறைவு, பதுக்கல், கடத்தல் என பல காரணங்கள் கூறப்படுகின்றன.
மக்கள் வாங்கும் திறனுக்கு ஏற்பப் பொருள்களை அதிகமாக உற்பத்தி செய்யவும், இயற்கைச் சீற்றங்களிலிருந்து இன்றியமையாப் பொருட்களை காப்பாற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்