பிரேசிலின் பெர்னாம்புகோ மாகாண தலைநகரான ரெசிஃப் நகரில் உள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர்.
வடகிழக்கு பிரேசிலில் ரெசிஃப் நகரின் ஜங்கா பகுதியில் அமைந்துள்ள நான்கு தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஆறு மணியளவில் இடிந்து விழுந்தது.
மேலும் அந்த பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை எனவும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.