களுவாஞ்சிக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் புலிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. மனிதப் புதைகுழிகள் தொடர்பில் எவரும் தண்டிக்கப்படுவதில்லை.
அப்படியானால் அதற்கான முழுப்பொறுப்பையும் கருணா(விநாயகமூர்த்தி முரளிதரன்) ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய(07.07.2023) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து பல மனித எச்சங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் பல மனித எச்சங்கள் அதற்குள் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
காணாமல்போன தமது உறவுகளும் இந்த புதைகுழிக்குள் இருக்கலாமோ என்ற அச்சம் காணாமல்போனோரின் உறவுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான மனித புதைகுழிகளை தோண்டும்போது சர்வதேச விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆனால் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயத்தில் அது பின்பற்றப்படவில்லை. அத்துடன் இதற்கு வெளிநாட்டு நிபுணர்கள், தடயவியலாளர்கள் ஆகியோரின் உதவிகளையும் பெற வேண்டும்.