ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் முன்னெடுக்கப்படும் நலன்புரித் திட்டத்திற்கான நபர்களைத் தெரிவு செய்யும் போது தகுதியான பலர் துண்டிக்கப்பட்டுள்ளதாகக்கூறி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டமும் இணைந்துள்ளது.
நம்பகமான புள்ளிவிபரங்களுக்கு அமைய, போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களும் அந்த நன்மையை இழந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 23,901 பேர் மாத்திரமே சமுர்த்தி உதவித்தொகையை பெற்றுக்கொள்வதாகவும், ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட அஸ்வெசும நலன்புரி உதவித்திட்டத்திற்கு 16,211 பேர் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜூன் 27ஆம் திகதி புதுக்குடியிருப்பு உடையார்கட்டு சமுர்த்தி வங்கியின் முன்பாக மூங்கிலாறு, உடையார்கட்டு, தேராவில் உள்ளிட்ட கிராம மக்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு, புதிதாக தயாரிக்கப்பட்ட பட்டியலில் பயன்பெறத் தகுதியானவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என வலியுறுத்தினர்.
நலத்திட்ட உதவிகளைப் பெறத் தகுதியுடைய அனைவருக்கும் அந்தச் சலுகைகளை வழங்குமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.