கடந்த ஆண்டு கைதாகி, சிறைத்தண்டனையில் விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர் ஒருவர் இந்த ஆண்டு மீண்டும் கைதாகி ஊர்காவற்றுறை நீதிமன்றால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ். மேல் நீதிமன்றால் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கடற்பரப்புக்கள் அத்துமீறி மீன்பிடித்தமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்களில் இந்திய மீனவர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கைதானவர்களுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றால் 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய விடுதலையான மீனவர் மீண்டும் இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையில் விதிக்கப்பட்ட இரண்டு 6 மாத கால சிறைத்தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவேண்டும் என்றும், மீளவும் அத்துமீறிய குற்றத்துக்காக 8 மாத சிறைத்தண்டனையுமாக 14 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய மீனவரால் யாழ். மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இதற்கமைய மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த நபருக்கு 3 மாதகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.