பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உலக நாடுகளுக்காக இலங்கையின் கதவுகளை திறக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அது தொடர்பான சட்ட சீர்திருத்தங்கள் விரைவில் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதார முறைக்கு கொண்டு செல்வது எனது நம்பிக்கை. பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற இந்திய வர்த்தக சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் சுமார் 700 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமானது.
கேரளாவில் இருந்து இலங்கைக்கு வியாபாரம் செய்ய வந்த வரலாறு நமக்கு உண்டு. நவகமுவில் உள்ள பத்தினி ஆலயம் கேரள மக்கள் இந்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்கிய போது ஆரம்பிக்கப்பட்டதாகவும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை ஆசியப் பிராந்தியத்தில் பலம் வாய்ந்த நாடாக இந்தியா தனது அதிகாரத்தை நிலைநாட்டியுள்ளது. ஆனால், மேற்கு ஆசிய நாடுகளும் பலமாக மாறியிருப்பதும் சிறப்பம்சமாகும்.
இந்தியா போன்ற பலம் வாய்ந்த நாடுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் பெரும் நன்மையை உருவாக்க முடியும்.