ஆபிரிக்க நாடான சூடானின் மேற்கு பகுதியான டார்பூரில் 87 பேரின் சடலங்கள் ஒரே புதைக்குழிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சூடானில் இராணுவத்தினருக்கும், துணை இராணுவத்திற்கும் இடையே கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி உள்நாட்டு போர் தீவிரம் மூண்டது.
இந்த போர் தீவிரத்தை நிறுத்தவதற்கு பல்வேறு இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரை அது பயனளிக்கவில்லை எனலாம்.
இதன் காரணமாக சூடான் முழு அளவிலான உள்நாட்டு போரின் விளிம்பில் இருப்பதாக அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது.
சூடான் தலைநகர் கார்டோமில், கடந்த ஏப்ரல் 15 அன்று வெடித்த உள்நாட்டு போரின் விளைவாக சுமார் 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதுவரையில் குழந்தைகள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அண்டை நாடான சாட்வில் ஏற்கனவே உள்ள 7 முகாம்களில் 36,423 அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்.