திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடியில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா நடந்தது.
விழாவுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.74 கோடி மதிப்பில் 14,253 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
தி.மு.க. தலைமையிலான அரசு பதவியேற்று 26 மாதங்கள் ஆகிறது. இதில் 260-க்கும் அதிகமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் லட்சியம்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் திட்டம் செல்ல வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு அரசு செயல்படுகிறது. புதுமைப்பெண் திட்டத்தில் தமிழகத்தில் 2 லட்சம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். காலை சிற்றுண்டி திட்டத்தில் தமிழகத்தில் 17 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் மருத்துவ செலவு பாதியாக குறைந்துள்ளது.
இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தில் 1,100 பேர் பயன் அடைந்துள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 63,400 பேர் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவுக்கேவழிகாட்டியாக… அனைவரும் எதிர்பார்க்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பார்த்து மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.