இந்தியாவிலிருந்து சர் வதேச மாணவராக கனடா வந்த இளைஞர் ஒருவரை ஏமாற்றி, ஒரு கூட்டம் கொலை செய்துள்ளது .
கல்வி பயில்வதற்காக கனடா வந்த இந்தியரான குர்விந்தர் நாத் , விடுமுறையில் பீட்சா டெலிவரி செய்யும் வேலை செய்துவந்துள்ளார்.
இம்மாதம், அதாவது ஜூலை 9ஆம் திகதி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிலர் பீட்சா ஆர்டர் செய்ய, அங்கு பீட்சா டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார் குர்விந்தர்.
ஆனால், உண்மையில் குர்விந்தரின் காரை திருடுவதற்காகவே சிலர் அவரிடம் போலியாக பீட்சா ஆர்டர் செய்துள்ளதாக கருதப்படுகிறது.
குர்விந்தர் பீட்சா டெலிவரி செய்ய அங்கு சென்றதும், அங்கிருந்தவர்கள் அவரது காரைக் கடத்த முயன்றிருக்கிறார்கள். குர்விந்தர் தடுக்க, கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
குர்விந்தரை கடுமையாக தாக்கிவிட்டு அந்த மர்ம நபர்கள் காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்கள்.
கடுமையாக தாக்கப்பட்ட குர்விந்தரை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.
கோமா நிலையிலிருந்த குர்விந்தர், சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, ஜூலை 14ஆம் திகதி உயிரிழந்துவிட்டார்.
குர்விந்தரின் குடும்பத்தினர் இந்தியாவிலிருக்கும் நிலையில், அவரது மரணச் செய்தி அவரது தந்தை மற்றும் சகோதரரைச் சென்றடைந்துள்ளது. அவரது தாய்க்கு அவர் இறந்த செய்தி இன்னமும் தெரிவிகப்படவில்லை என கூறப்படுகிறது.
மகன் கனடாவில் படித்து முடித்து, அவருக்கும் தங்களுக்கும் ஒரு நல்ல காலம் பிறக்கும் என காத்திருந்த குர்விந்தரின் குடும்பம் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளது.