இலங்கை மத்திய வங்கியினால் கொள்கை ரீதியாக வட்டி வீதத்தை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இணங்க, வங்கிகளில் கடன்களுக்கான வட்டி வீதத்தை உடனடியாக குறைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி சகல வங்கிகளுக்கும் அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இது தொடர்பில் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை வங்கி சங்கத்தின் தலைவருக்கு இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம்மாதம் ஐந்தாம் திகதி கூடிய மத்திய வங்கியின் நிதிச்சபை, அதன் நிரந்தர வைப்புச் சலுகை வீதத்தை நூற்றுக்கு 11 வீதமாகவும், நிரந்தர வைப்பிற்கான கடன் சலுகை வீதத்தை நூற்றுக்கு 12 வீதத்தாலும் குறைப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளது.
இத்தீர்மானத்திற்கு இணங்க வங்கிகள் மற்றும் நிதி கட்டமைப்பு தமது வாடிக்கையாளர்களுக்கு இதன் பிரதிபலனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய வங்கி மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு இணங்க செயற்படத் தாமதித்தால் இது தொடர்பில் நிர்வாக ரீதியான தீர்மானத்தை மேற்கொள்ள நேரிடும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.