பிரதமர் மோடி நேற்று ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு திட்டங்களை தொடங்கியும் வைத்தார்.
அத்துடன் நாடு முழுவதும் விவசாயிகளுக்காக 1.25 லட்சம் கிசான் சம்ரிதி கேந்திராக்களை அர்ப்பணித்தார். இது விவசாயிகளின் அனைத்து தேவைகளுக்குமான ஒரே மையமாக விளங்கும்.
மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுத்து வருகிறது.
விதைகள் முதல் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல் வரை அனைத்து வசதிகளையும் அவர்களுக்கு செய்து வருகிறது. யூரியா விலை உயர்வால் விவசாயிகள் அவதிப்பட எங்கள் அரசு அனுமதிக்காது.
அந்தவகையில் இந்தியாவில் விவசாயிகள் ஒரு மூடை யூரியாவை ரூ.266-க்கு பெறுகிறார்கள். ஆனால் இது பாகிஸ்தானில் ரூ.800-க்கு விற்கப்படுகிறது.
மேலும் வங்காளதேசத்தில் ரூ.720-க்கும், சீனாவில் ரூ.2,100-க்கும் விற்பனையாகிறது. நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ள கிசான் சம்ரிதி கேந்திராக்கள் விவசாயிகளின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.