வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 114 ரன்னில் சுருட்டி வெற்றி கண்ட இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.
இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மல்லுக்கட்டுகின்றன. டிரினிடாட்டின் தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை சுழற்பந்து வீச்சு ஜாலத்தால் புரட்டியெடுத்த இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 181 ரன்னில் அடங்கிப்போனது.
இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், சுப்மன் கில் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் திரட்டிய போதிலும் மிடில் வரிசை வீரர்கள் சொதப்பி விட்டனர்.
கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன், அக்ஷர் பட்டேலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அவர்கள் ஜொலிக்கவில்லை.
ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டி வருவதால் அதற்கு முன்பாக இளம் வீரர்களை இந்த தொடரில் பரிசோதித்து பார்ப்பதாக பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்தார்.
இதனால் இன்றைய ஆட்டத்திலும் ரோகித், விராட் கோலி இடம் பெறுவது சந்தேகம் தான். ஹர்திக் பாண்ட்யாவே அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது.