யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரத்தை கையாளும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் கொடிகாமம், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இல்லாமை இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட மட்டத்திலான சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (08.08.2023) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாணம் பிராந்தியம், காங்கேசன்துறை பிராந்தியம் என 17 பொலிஸ் நிலையத்தில் 17 ஆண் பொலிஸாரும் 14 பெண் பொலிஸாருமாக மொத்தமாக 31 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர் என அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மேலும், கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்,
ஆசிரியர்களுக்கு மனித உளவளம் சம்பந்தப்பட்ட பயிற்சி தேவை. இந்நிலையில் வேலணை மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக குறித்த பயிற்சி வழங்கப்படவுள்ளது.
சிறுவர் அபிவிருத்தி எனும் போது பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களுக்கு உளவள பயிற்சி என்பது முக்கியம் பெறுகிறது.
நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உளவள பயிற்சி தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும். மாகாணப் கல்விப் பணிப்பாளருடன் இது தொடர்பில் கதைத்திருந்தேன்.
தனியார் நிறுவனம் ஊடாக குறித்த பயிற்சியை வழங்குவதுடன், வேலணை மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பமான பயிற்சிநெறி பின்னர் கட்டம் கட்டடமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வலயக் கல்விப் பணிப்பாளர் பாடசாலை அதிபர்கள் குறித்த விடயத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15 ஆக காணப்படுவதாக சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்குகள் மற்றும் தந்தை தாய் இடையேயான முரண்பாடு பிறப்பு பதிவை மேற்கொள்வதில் சிக்கல் காணப்படுவதாக அறியப்படுகிறது.
இதன்படி கடந்த காலாண்டில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 104 ஆக காணப்பட்டபோதும் பல்வேறு பட்ட முயற்சிகளுக்கு பின்னர் 89 பேருக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சில சிறுவர் இல்லங்கள் மாவட்ட செயலக அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதில்லை என இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், யாழ். மாவட்டத்தில் பிரதேச செயலகம் வாரியாக தனியார் கல்வி நிறுவனங்களின் விபரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சேகரிக்கப்படும் விபரங்களை அடிப்படையாகக் கொண்டு தனியார் கல்வி நிறுவனங்களுக்கான பொறிமுறை மற்றும் கட்டுப்பாடுகளை வகுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.