கொரோனா சிகிச்சை பணி செய்த மருத்துவர்களுக்கு, எம்.ஆர்.பி தேர்வில், கூடுதல், ஊக்க மதிப்பெண் வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின், பல்வேறு துறைகளில் வேலையை பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி தகுதி வரை, தமிழ் மொழி வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த ஒதுக்கீடு, தமிழ் வழியில் படிக்க வேண்டும் என்ற உணர்வை அதிகரிக்கும். தமிழ் வழியில் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற தவறான கருத்தை தகர்க்கும். வேறு மாநிலத்தவர் தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பை பெறுவதையும் தடுக்க உதவும்.
அதுமட்டுமின்றி, தமிழ் வழியில் படிப்பவர்கள் பெரும்பாலும் அரசு பள்ளியை சார்ந்தவர்களாக உள்ளனர். சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாவும், மிக மிக பின்தங்கிய, கிராமப்புற குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
எனவே, இந்த இடஒதுக்கீடு என்பது, தமிழ் வழிக் கல்வியை பாதுகாப்பதுடன், சமூக ரீதியாக, கல்வி ரீதியாக மிகவும் பின்தங்கிய, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கிராமப்புற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பை பெறவும் உதவுகிறது. எனவே, இவ்வொதுக்கீடு வரவேற்புக்குரியது.