தமிழரசு கட்சியின் எம்.பி ஒருவரே மட்டக்களப்பு அபிவிருத்தி குழு கூட்டத்தை குழப்புகின்றார் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,“வடக்கு கிழக்கில் அவர்களுக்கு எதிராக வளர்ந்து நிற்கும் கட்சி நாங்கள் தான் என்னை வீழ்த்துவதற்கே நான் பிழையானவன் எனவும் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு எதிரான விடயங்களை செய்கின்றோம் எனவும் மக்கள் மத்தியில் காண்பிப்பதற்கான முனைப்பில் அவர் இவ்வாறு செயற்படுகின்றார்.
ஆனால் நான் அதை ஒரு பிரச்சினையாக பார்க்கவில்லை.உண்மையிலேயே அபிவிருத்தி குழு கூட்டங்களின் வரையறை என்ன, அபிவிருத்தி குழு தலைவரின் கடமைகளும் பொறுப்புகளும் என்ன, மக்கள் பிரதிநிதிகள் எந்த விடயத்தை எங்கு பேச வேண்டும் என்ற வரையறைகள் இன்னும் அவருக்கு தெரியவில்லை.
நான் முதலமைச்சராக இருந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல உறுப்பினர்களுடன் இந்த பணிகளை செய்திருக்கிறேன். மக்களுக்கு சேவை செய்வதாக வாயாலும் உணர்ச்சிவசமான குரலாலும் காட்டுகின்றார்.
இது அவருடைய தனிப்படட அரசியல் விருப்பு வெறுப்பாகவே உள்ளது.”என கூறியுள்ளார்.