வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு பின்னர் இந்த நாட்டிலே பாரிய இனச்சுத்திகரிப்பு வடகிழக்கிலே ஏற்பட்டது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (09.08.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வடக்கிலே இருந்து இரவோடு இரவாக 24 மணித்தியாலத்திற்குள் 95,000 முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்ட வரலாற்றை ஒரு போதும் மறந்து விட்டு நாங்கள் இப்போது பேச முடியாது.
முஸ்லிம்கள் தொழுதுகொண்டிருந்த போது கொல்லப்பட்ட வரலாறுகளையும், கிராமங்களிலே துப்பாக்கிகள் இல்லாமல் வெறும் கத்திகளால் கொல்லப்பட்ட வரலாறுகளையும் நாங்கள் பேசாமல் 13ஆவது திருத்தத்தை பற்றி பேச முடியாது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒரு நிரந்தர தீர்வாக இல்லாமல் இருப்பதற்கு இந்த நாட்டிலே முஸ்லிம்களுடைய அடிப்படை இனப் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டது தான் காரணம் என்று நான் ஆணித்தரமாக இவ்விடத்தில் கூறி வைக்க விரும்புகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.