தன் காதலி தன்னை வீட்டுக்குள் அனுமதிக்காத கோபத்தில், கனேடியர் ஒருவர் செய்த செயலால், 12 வயது சிறுமி ஒருத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளாள்.
கனடாவின் Ottawa நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வாழும் தனது முன்னாள் காதலியின் வீட்டுக்குள் நுழைய முயன்ற டேவிட் என்பவரை வீட்டுக்குள் அனுமதிக்க அந்த பெண் மறுத்துள்ளார்.
ஆத்திரத்தில், வேறொரு வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார் டேவிட். அந்த வீட்டுக்குள் சுமையா என்னும் 12 வயது சிறுமி இருந்திருக்கிறாள்.
கதவை உட்புறமாகப் பூட்டிய டேவிட், சுமையாவைப் பார்த்து, உன் தாய் உட்பட கட்டிடத்தில் இருந்த எல்லாரும் செத்துவிட்டார்கள் என்று கத்தியிருக்கிறார்.
பயந்துபோன சுமையா குளியலறைக்குள் சென்று ஒளிய முயல, குளியலறைக் கதவில் தாழ்ப்பாள் இல்லாததால், என்ன செய்வதென்று புரியாமல், ஓடிச் சென்று மாடியிலிருந்து குதித்திருக்கிறாள்.
டேவிடுக்கு ஒன்பது மாதங்கள் வீட்டுச் சிறை தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு ஆண்டுகள் அவர் அதிகாரிகளின் மேற்பார்வையிலிருக்கவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதற்குக் காரணம், துஷ்பிரயோகத்துக்குள்ளாகி போதைக்கு அடிமையாகியிருக்கிறார் டேவிட், அத்துடன், சமீபத்தில்தான் அவரது மகன் போதை காரணமாக உயிரிழந்துள்ளான்.
ஆனால், டேவிடுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது என கருதுகிறார்கள் சுமையாவின் குடும்பத்தினர். மூன்றாவது மாடியிலிருந்து குதித்த சுமையாவின் கால், கணுக்கால் மற்றும் முதுகெலும்பிலுள்ள எலும்புகள் நொறுங்கிப்போனதால் அவள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.
ஆகவே, தன் மகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கருதுகிறார் சுமையாவின் தாயாகிய Zeinab Mohamed. டேவிடுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை, நிறம் சார்ந்த தங்களுக்கு சட்ட அமைப்பு பாரபட்சம் காட்டுவது போல் உள்ளதாக தான் கருதுவதாக தெரிவிக்கும் அவர், கனடா தங்கள் நாடு அல்ல என்பது போல் உணர்வதாகத் தெரிவிக்கிறார்.