கொடியேற்றி வைத்த பின்னர் தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;- “இந்தியாவின் முக்கியமான அங்கம் நம் தமிழ்நாடு.
முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 3-வது ஆண்டாக தேசியக் கொடியை ஏற்றி வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன். சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றுவதில் தி.மு.க. அரசு யாருக்கும் சளைத்தது அல்ல.
மாநிலங்களுக்கு மாநிலம் உணவு, மொழி, பண்பாட்டில் மாறுபாடு உள்ளது. வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையுடன் வாழ்வதே நம் பலம். மதங்களின் பெயரால் மக்களிடையே உள்ள பிளவை களைய முயன்றவர் மகாத்மா காந்தி.
நாட்டின் வளர்ச்சி பெண்களிடம் இருந்தே தொடங்குகிறது என்பதை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
புதுமைப் பெண், கட்டணமில்லா பேருந்து சேவை என பெண்களுக்கான திட்டங்களை வகுத்துள்ளோம். பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் இனி ‘விடியல் பயணத் திட்டம்’ என்று அழைக்கப்படும்.” இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.