அனைத்து இன மக்களின் சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கும் எதிராக குரல் கொடுப்பேன், இதில் நான் பாகுபாடு பர்க்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,“சட்டவிரேதமாக எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டாலும் அது தவறு என்பதே எனது நிலைப்பாடு. அதிலும் அரசியல் செல்வாக்குடன் இடம்பெறுகின்ற காணி அபகரிப்புச் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது.
உதாரணமாக மகாவலி அபிவிருத்தி தொடர்பாக எழுந்த பிரச்சினைகளில் அண்மையில் கோப் குழுவில் நான் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் தற்போது என்ன நடக்கின்றது.
இரவோடிரவாக ஒரு பிரதேசத்தில் இவ்வாறான காணி அபகரிப்பு செயற்பாடுகளை சாதாரண மக்களால் முன்னெடுக்க முடியாது என்பது அனைவருக்குமே தெரிந்த விடயம். ஆனால் சில அரசியல் பின்புலத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது.
குறிப்பாக நான் இனிமேல் இவ்வாறான விடயங்களுக்கெதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். அதில் எந்த பாரபட்சத்திற்கும் இடமில்லை. அது தமிழ்பேசும் சமூகமாக இருந்தாலும் தவறுதான். பெரும்பான்மை சமூகமாக இருந்தாலும் சரி தவறுதான். எந்த சமூகத்திற்கு எதிராகவும் நான் செயற்படப்போவதில்லை.
ஆனால் இந்த விடயங்களுக்கெதிராக நான் செயற்படும் போது குறித்த சமூகங்களுக்கு எதிரானவன் என்று சிலர் முத்திரை குத்தப் பார்க்கின்றார்கள்.
எனவேதான் இந்த விடயத்தில் அரசாங்கம் மகாவலி அபிவிருத்தி விடயத்தில் காணி அபகரிப்பு சம்பவங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை. இது கவலைக்குரிய விடயமாகும்.