Home உலகம் ஆப்கானிஸ்தானில் கடும் உணவு பஞ்சம்

ஆப்கானிஸ்தானில் கடும் உணவு பஞ்சம்

by Jey

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் அமைப்பு கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அங்கு பொருளாதார சிக்கல் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஏழ்மை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.

கடந்த 3 ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சி மற்றும் 2 ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடி ஆகியவை மக்களின் தேவைகளை அதிகப்படுத்தியிருப்பதாக செஞ்சிலுவை சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் 27 லட்சம் மக்கள் நீண்ட கால உணவு பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பெரிய பொருளாதார திட்டங்களை அரசு தொடங்கியிருப்பதாக தலிபான் அரசின் பொருளாதார அமைச்சகம் கூறியுள்ளது.

உணவு பற்றாக்குறையால் தவித்து வரும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உதவும் விதமாக, ஐ.நா. சர்வதேச உணவு திட்டத்துடன் இணைந்து இந்தியா கோதுமை வழங்குகிறது.

இந்தியா இதுவரை ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. சர்வதேச உணவு திட்ட மையங்களுக்கு மொத்தம் 47,500 மெட்ரிக் டன் கோதுமை வழங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள 1.6 கோடி மக்களை பாதுகாப்பதற்கான உணவை வழங்க இந்தியா உதவியதற்கு ஐ.நா. சர்வதேச உணவு திட்ட மையம் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

related posts