நாடளாவிய ரீதியில் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரித்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக சிகிச்சை பிரிவினை முழுமையாக பயன்படுத்துமாறு வைத்தியசாலையின் சிறுநீரக நோயியல் வைத்தியர் சிசில் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுநீரக நோயுடன் தொடர்புடைய அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் வைத்தியசாலை வைத்தியர் ஊடாக தங்களது சிறுநீரக குருதி சுத்திகரிப்பு பிரிவின் சிகிச்சையை பொது மக்கள் பெற முடியும்.
சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரிப்பு
இலங்கையில் அண்மைக்காலமாக சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக சிறுநீரக தொற்று, சிறுநீரக கற்கள்,சிறுநீரக சிதைவு,சிறுநீரக செயலிழப்பு உள்ளடங்களாக சிறு நீரகங்களுடன் தொடர்புடைய அதிகளவான நோய் காரணிகள் அதிகரித்துள்ளதுடன் இதன் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடுகளும் இவ்வாறான மரண அதிகரிப்புக்கு காரணங்களாக அமைகின்றன.
மனித உடலில் சிறுநீரகமானது சாதாரண நிலையில் 10 சென்றி மீற்றர் அளவு கொண்டிருக்கும் போது சிறுநீரகமானது தனது தொழிற்பாட்டை சாதாரணமாக மேற்கொள்ளும்.
இருப்பினும் உணவு பழக்கவழக்கம் அன்றாட நடவடிக்கைகள் நீரிழிவு,உயர் குருதி அமுக்கம் போன்ற நோய் காரணங்களால் சிறுநீரகங்களில் ஏற்படும் பாதிப்பினால் அவ் சிறுநீரகங்கள் சிறிதாவதுடன் அதன் செயற்பாடுகளும் மாற்றங்களுக்கு உள்ளாகின்றது.