Home உலகம் பாகிஸ்தான் குண்டுவெடிப்பு – 11 பேர் உடல் சிதறி பலி

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு – 11 பேர் உடல் சிதறி பலி

by Jey

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் வஜிரிஸ்தானில் உள்ள ராணுவச்சாவடி அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கட்டுமான தொழிலாளர்கள் லாரியில் சென்று கொண்டிருந்தனர்.

ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஷவால் என்ற பகுதி அருகே சென்றபோது திடீரென அந்த லாரியின் அடியில் பொருத்தப்பட்டு இருந்த குண்டு வெடித்து சிதறியது. இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 11 பேர் உடல் சிதறி பலியாகினர். இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

மேலும் சில தொழிலாளர்கள் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு பாகிஸ்தானின் இடைக்கால பிரதமரான அன்வார்-உல்-ஹக்கர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தலைதூக்கிய பயங்கரவாதம் ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலீபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அங்கு பயங்கரவாதம் தலைதூக்கி உள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளிலும் அவர்கள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

ஆனால் தலீபான்கள் அதனை மறுத்து வருகின்றனர். அதேசமயம் பாகிஸ்தானிலும் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்று ஒரு தனி பயங்கரவாத அமைப்பு செயல்படுகிறது.

அவர்கள் அப்பாவி பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் மீது அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அவர்கள்தான் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

related posts