இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சென்ற இரண்டு சிறுமிகள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி ஒட்டுமொத்த உலக வாழ் தமிழர்களின் கவனத்தினையும் ஈர்த்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் யாழினை சேர்ந்த சிறுமி கில்மிசா இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட தனது மாமாவினை ஞாபகப்படுத்தி “கண்டா வரச்சொல்லுங்கள்” என்ற பாடலை பாடி அரங்கத்தினையே உருக வைத்துள்ளார்.
ஈழப்போரில் காணாமலாக்கப்பட்ட தனது மாமாவினை ஞாபகப்படுத்தி 30 வருடகால ஈழ யுத்த வலியை உலகளவில் சிறுமி கில்மிசா கொண்டு சேர்த்துள்ளார்.
இதனை தொடர்ந்து இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட பலருக்காகவும் 2 நிமிடம் பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமிக்கு சினிமாவில் பாடல் பாடுவதற்கான வாய்ப்பினையும் இந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் வழங்கியுள்ளதுடன், பாடலாசிரியர் சினேகன் பல உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.
மேலும், இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் 162 நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் உணர்வுகளுக்கு மீண்டும் ஒருமுறை மதிப்பளிக்கும் வகையில் சிறுமியின் பாடல் அமைந்துள்ளதாகவும் பாடகர் சினேகன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈழத்தில் கில்மிசாவை போன்று பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தங்களது தந்தையர்கள்,தாய்மார்கள்,மாமாக்களை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கும் உறவுகளாகவே உள்ளனர் என கவிஞர் தீபச்செல்வனும்யுத்த கால வரலாற்றினை இதன்போது பகிர்ந்துள்ளார்.