ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது.
இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது.
இதனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் அடைந்து, சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது. இந்த விபத்து நிகழ்ந்து 12 ஆண்டுகள் கடந்தும், அந்த உலையில் இன்னும் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே புகுஷிமா அணு உலையில் உள்ள அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றிவிட்டு அந்த அணுஉலையை முழுமையாக செயலிழக்கச் செய்யும் பணிகளில் டெப்கோ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் புகுஷிமா அணு உலையில் அணு கழிவுகள் நிறைந்த சுமார் 10 லட்சம் மெட்ரிக் டன் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு ஆலையின் அருகில் உள்ள மிகப்பெரிய தொட்டிகளில் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.