கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற இந்தியர் ஒருவர் இந்தியா வந்த நிலையில், அவரை ட்ராக் செய்த பொலிசார் டெல்லியில் அவர் தங்கியிருந்த இடத்தில் வைத்து அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அந்த நபரின் பெயர் ராகுல் (Rahul Gangal). ராகுல், 2019ஆம் ஆண்டு கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றுள்ளார்.
அவரது மனைவியும் பிள்ளைகளும் கனேடிய குடிமக்கள். ரொரன்றோவில் வாழ்ந்து வரும் ராகுல், ஜேர்மன் நிறுவனம் ஒன்றில் 2013 முதல் பணியாற்றிவருகிறார்.
கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், இந்திய ராணுவ ரகசியங்களை வெளிநாடுகளுக்கு கொடுத்த வழக்கு ஒன்று தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் வெளிநாடுகளிடமிருந்து சுமார் 3 கோடி ரூபாய் வரை பெற்றது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ராகுல் எனும் ஒருவர் கனடாவிலிருப்பது இந்திய உளவுத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது.
அவரை அவர்கள் ரகசியமாக கண்காணித்துக்கொண்டிருந்த நிலையில், அவர் இந்தியாவுக்கு வருவதாக துப்புக் கிடைத்துள்ளது.
திங்கட்கிழமை ராகுல் இந்தியா வந்துள்ளார். அவரை ட்ராக் செய்த அதிகாரிகள், அவர் டெல்லியில் ஒரு இடத்தில் தங்கியிருப்பது தெரியவரவே, அங்கு சென்று அவரை கைது செய்துள்ளார்கள்.
CBI அதிகாரிகள் அவரை கைது செய்துள்ள நிலையில், நான்கு நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றம் ஒன்று அனுமதியளித்துள்ளது.