அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன.
எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் கடந்த மாதம் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் நடந்தது.
பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த சூழலில் ‘இந்தியா’ கூட்டணியின் 3-வது கூட்டம் மராட்டிய தலைநகர் மும்பையில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.
கூட்டத்தில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் மும்பைக்கு படையெடுத்து வருகிறார்கள்.
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் நேற்று முன்தினமே மும்பை வந்துவிட்டனர்.