இஸ்ரேல் நாட்டில் கட்டுமான தொழிலுக்கு தேவையான ஆட்கள் உள்ளூரில் பற்றாக்குறையாக காணப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட வெளிநாடுகளில் இருந்து தொழில் தெரிந்த தொழிலாளிகளை வேலைக்கு சேர்த்து கொள்கிறது.
இதன்படி, இஸ்ரேல் நாட்டின் கட்டுமான தொழிலுக்கு தேவையான ஆட்களை கொண்டு வருவதற்காக சீன கட்டுமான கூட்டமைப்புடன் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது.
இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடியுரிமை கழகம் சார்பில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 3 ஆயிரம் கூடுதல் தொழிலாளர்களை சீனாவில் இருந்து இஸ்ரேலுக்கு கொண்டு வர முடிவானது.
இஸ்ரேலில், தற்போது 28 ஆயிரம் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த 2 மாதங்களில், இந்த வெளிநாட்டு தொழிலாளர்களை கொண்டு, கட்டுமான பணி செய்வதற்கான ஆட்களை தேர்ந்தெடுப்பது மற்றும் பணி நியமனம் செய்யும் நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வரும். இந்த பணியாளர்கள் கட்டுமான தொழிலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஊக்குவிப்பாக இருக்கும் என இஸ்ரேல் குடியுரிமை கழகம் தெரிவித்து உள்ளது.