போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 200 மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
2030ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்து பொதுப் போக்குவரத்துகளும் புதைபடிவ எரிபொருட்களின் (Fossil fuels) பாவனையிலிருந்து விடுபடுவது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில், மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 200 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்திற்காக, தற்போது முதலீட்டாளர்களிடமிருந்து விருப்பங்கள் (Expression of Interest) கோரப்பட்டுள்ளன.
இந்த திட்டம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கூட்டு முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், முதலீட்டாளர்களுக்கு மின்னேற்ற நிலையங்களை (Charging Point) நிறுவவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பின்னர், பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஊடாக, முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்திய பிறகு, பேருந்துகளின் உரிமை அரசாங்கத்துக்கு கிடைக்கும்.