தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இருந்து திருடப்பட்ட விலை மதிக்கமுடியாத பழங்கால சிலைகளை அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு கடத்திச்சென்று கோடிக்கணக்கில் விற்று பணம் சம்பாதித்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் தற்போது சிறை தண்டனை பெற்று, தமிழக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவரால் கடத்தி செல்லப்பட்ட கிருஷ்ணர் சிலை ஒன்று தற்போது அமெரிக்காவில் உள்ள எச்.எஸ்.ஐ. என்ற அமைப்பிடம் உள்ளதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சிலை காளிங்கன் என்ற 5 தலை பாம்பின் மேல் கிருஷ்ணர் நடனமாடுவதைப்போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் கடத்தி செல்லப்பட்டு, ரூ.5.2 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதும் அம்பலமாகி உள்ளது. சோழர் காலமான 11-12-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலையை போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா கடத்தி சென்றுள்ளனர்.
திருடப்பட்ட கோவில் எது? இந்த சிலை தமிழ்நாட்டில் உள்ள எந்த கோவிலில் திருடப்பட்டது என்பதை கண்டுபிடிக்கும் படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார்.
ஐ.ஜி.தினகரன், சூப்பிரண்டு டாக்டர் சிவகுமார், கூடுதல் சூப்பிரண்டு பாலமுருகன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் காவேரியம்மாள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உள்ளார்.
விலை மதிக்கமுடியாத இந்த நடனமாடும் கிருஷ்ணர் சிலையை அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டுக்கு மீட்டுக்கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.