நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயன சாயத்தை விநாயகர் சிலைகளுக்கு பூசக்கூடாது என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்ப ற்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இடங்களில் விநாயகர் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
சிலைகளில் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில் வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ண பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ண பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது.