குடிமங்கலம் பகுதியில் பருவமழைகள் போதிய அளவில் பெய்யாத நிலையில் ஏற்பட்ட வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து கருகி வருகின்றன.
நிலைப்பயிர் தென்னையைப் பெத்தா இளநீரு…பிள்ளையை பெத்தா கண்ணீரு…என்பது மிகவும் பிரபலமான திரைப்படப் பாடலாகும்.
அதாவது பெற்ற பிள்ளையை விட கூடுதல் பலனைத் தரக்கூடியது தென்னை மரம் என்ற கருத்தை இந்த பாடல் வலியுறுத்தியுள்ளது. ஆனால் இன்றைய நிலையில் பல நூறு தென்னையை வைத்திருக்கும் விவசாயியும் கண்ணீருடன் காலத்தை கழிக்க வேண்டிய நிலையே உள்ளது.
அடி முதல் நுனி வரை பலன் தரக்கூடிய கற்பகத் தருவான பனை மரங்களுக்கு இணையாக பலன் தரக்கூடியது என்று தென்னை மரங்களை சுட்டிக் காட்டுவார்கள்.
ஆனால் இன்றைய நிலை என்ன? தென்னை மரங்கள் தன் நிலையிலிருந்து மாறாமல் இளநீர், தேங்காய், பதநீர் என வாரிக் கொடுத்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதன் பலனை விவசாயிகளால் அனுபவிக்க முடியவில்லை.
தேங்காய், கொப்பரை, உரிமட்டை உள்ளிட்ட எந்த பொருளுக்கும் போதிய விலை இல்லாத நிலை நீடிக்கிறது. இதனால் வருவாய் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகள், நிலைப்பயிரான தென்னையை விடவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல், புலி வாலைப் பிடித்தது போல தவித்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலையில் பருவமழையும் கைவிட்டதால் குடிமங்கலம் பகுதியில் பாசன நீருக்கான பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் ஏராளமான தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி வருகின்றன.