கடந்த சில மாதங்களாக அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 11 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் அண்ணாமலை கடுமையாக அண்ணாதுரையை விமர்சித்திருந்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் கூறுகையில் பேரறிஞர் அண்ணா இல்லையென்றால் தமிழகம் இல்லை, அண்ணாமலையின் வயது 40 கூட இன்னும் முடியவில்லை. 1951-இல் மதுரையில் அண்ணா பேசியதாக ஒரு சம்பவத்தை கூறுகிறீர்கள்.
அந்த சம்பவத்திற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ, உங்களை நீங்கள் அறிவு ஜீவியாக நினைத்துக் கொண்டு எல்லாம் தெரியும் என பேசி உள்ளீர்கள்.
அந்த சம்பவம் நடந்து 74 ஆண்டுகள் ஆகிறது, உங்கள் வயது 40. அப்போது உங்களுடைய அப்பா அம்மாக்கு திருமணம் ஆகி இருக்காது. இவ்வாறு சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.
இதற்கு அண்ணாமலை இன்று பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: சி.வி. சண்முகம் அமைச்சராக இருந்ததே வசூல் செய்யத்தான். சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு முன்பு ஒரு விதமாகவும் பின்பு வேறு விதமாகவும் பேசுவார்.
10 ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கை என்னுடையது. என் நேர்மையை கொச்சைப்படுத்தினால் விடமாட்டேன். அண்ணா குறித்து நான் கூறிய கருத்துகள் உண்மை. அதிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன் என தெரிவித்திருந்தார்.