காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகின்றன.
இந்தநிலையில் சீனாவில் கிழக்கு ஜியான்க்சு மாகாணத்தின் சுகியான் நகரில் மையம் கொண்டு சூறாவளி புயல் ஒன்று உருவானது.
இதனால் தரைக்காற்று எழும்பி மணிக்கு 240 கி.மீ வேகத்தில் சூரைக்காற்று சுழன்றடித்தது. இதனை தொடர்ந்து சுமார் 1½ மணிநேர இடைவேளையில் சுகியான் நகரில் இருந்து 190 கி.மீ தொலைவில் உள்ள யான்செங் நகரில் 2-வதாக சூறாவளி ஒன்று உருவாகி சுழற்றி அடித்தது. மணிக்கு 200 கி.மீ வேகத்தில் இந்த சூறாவளி வீசியது.
ஒரேநாளில் அடுத்தடுத்து 2 சூறாவளி தாக்கியதால் ஜியான்க்சு மாகாணம் சின்னாபின்னமானது. இந்த புயலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.