திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது;
“பெரியாரும், அண்ணாவும் சந்தித்த ஊர் திருப்பூர். திருப்பூரை மாநகராட்சியாக்கியது மட்டுமல்ல. திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கியது கலைஞர். இந்திய நாடளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலின் தொடக்க புள்ளியாக முகவர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறோம்.
வாக்குச்சாவடி பொறுப்பாளர்களாகிய நீங்கள் தான் உங்களுடைய வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களுக்கு முழு பொறுப்பாளர்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்கு நீங்கள் தான் பொறுப்பாளர்கள். அதை மறந்துவிடக்கூடாது. நாற்பதும் நமதே, நாடும் நமதே என நான் முழங்கி இருக்கிறேன் என்றால் அதெல்லாம் உங்களின் மேல் நான் வைத்துள்ள அளவுக்கடந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் முழங்குகிறேன்.
இன்றிலிருந்து கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள் என்ற கம்பீரத்தில் நீங்கள் பணியாற்ற வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்.
வெற்றி மட்டும் உங்கள் இலக்காக இருக்க வேண்டும். வெற்றியை அடைவதற்கான வழிமுறையில் நீங்கள் பயணிக்க வேண்டும். பொறுப்பாளர்களாகிய உங்களுக்கு நிறைய கடமைகள் உள்ளது.