Home இலங்கை இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் ……??

இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் ……??

by Jey

இலங்கையில் இருந்து தற்போது இஸ்ரேலுக்கு செல்வதற்கு தயாராகி இருப்பவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறோம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் தற்போது உக்கிரமான தாக்குதல் இடம்பெற்று வரும் சூழலில் அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்கள் இருவர் தொடர்பில் கவலைக்குரிய செய்தி கிடைத்திருக்கின்றது என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

இஸ்ரேலில் இடம்பெற்றுவரும் மோதல் நிலை தொடர்பாக நாங்கள் எமது கவலையை தெரிவிக்கிறோம். அங்குள்ள எமது தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ள வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

அங்குள்ள எமது தூதரகம் திறந்தே இருக்கிறது. அதனால் எந்த சந்தர்ப்பத்திலும் அங்கு செல்ல முடியும். அத்துடன் இஸ்ரேலுக்கு தொழில் நிமித்தம் சென்றவர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்புவதாக இருந்தால் அதற்காகவும் தேவையான நடவடிக்கைகளை தயார் படுத்தி இருக்கிறோம்.

இஸ்ரேல் விமான நிலையத்துக்கு அண்மித்த பகுதிகளில் பிரச்சினைகள் இல்லை. அதனால் யாருக்கு வேண்டுமானாலும் நாட்டுக்கு திரும்ப சந்தர்ப்பம் இருக்கிறது. அதேபோன்று தற்போது இஸ்ரேலுக்கு செல்வதற்கு தயாராகி இருப்பவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறோம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளிவிவகார அமைச்சு இஸ்ரேல் தூதுதரகம் மற்றும் இஸ்ரேலின் பீபா நிறுனம் ஆகிய 4 நிறுவனங்களும் ஒன்றிணைந்து இது தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறோம்.

எமது நாட்டைச் சேர்ந்த 2 பேர் தொடர்பாக கவலைக்குரிய தகவல் கிடைத்து வருகிறது. அவர்களின் குடும்பங்களுக்கு எமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

related posts