கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேர் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னணியிலுள்ள உண்மைகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.
கனேடிய தூதரக அதிகாரிகள் 41பேரை இந்தியாவிலிருந்து வெளியேற்றுமாறு இந்தியா கனடாவை அறிவுறுத்தியதன் பேரில், இந்தியாவிலிருந்து கனேடிய தூதரக அதிகாரிகள் 41பேரை குடும்பத்துடன் திரும்ப அழைத்துக்கொண்டது கனடா.
தொடர்ச்சியாக கனேடிய தூதரக அதிகாரிகள் இந்திய உள்விவகாரங்களில் தலையிடுவது தொடர்பில் கவலை ஏற்பட்டதைத் தொடர்ந்தே, அவர்களுடைய எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக தெரிவித்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சரான S.ஜெய்ஷங்கர், வியன்னா ஒப்பந்தத்திற்குட்பட்டே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவில் கனேடிய அதிகாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டது ஏன் என்பதற்கான விளக்கம் வெளியாகியுள்ளது.
அதாவது, சண்டிகர் மற்றும் பஞ்சாபின் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு துணை தூதரகங்களில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள கனேடிய தூதர்கள், தங்கள் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி, காலிஸ்தான் ஆதரவாளர்களாக அறியப்பட்ட குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு விசா வழங்குகிறார்கள் என இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரத்திலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.