யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ரில்கோ ஹோட்டலில் கடந்த 4 ஆம் திகதி இரவு “DJ night” எனும் பெயரில் போதை விருந்து கொண்டாட்டம் ஒன்று இடம்பெற்ற விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொழும்பை சேர்ந்த Eventsby ShuttleVibe எனும் நிறுவனத்தின் பெயரில் சிலர் சமூக வலைத்தளங்களின் ஊடாக பார்ட்டிக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
ஆண்களுக்கு நுழைவு சீட்டு 1500 ரூபாய் என்றும் அவர்களுடன் வரும் பெண்களுக்கு 1000 ரூபாய் என விளம்பரம் செய்து 0741102280 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளுமாறும் கோரி இந்தக் குழு விளம்பரங்களை செய்துள்ளது.
அதன் பிரகாரம் பல இளைஞர்கள் நுழைவு சீட்டுக்களை பெற்று தமது பெண் நண்பிகளுடன் கொண்டாட்டத்திற்குச் சென்று இருந்தனர்.
DJ இசையுடன் ஆரம்பித்த கொண்டாட்டம் பின்னர் மது விருந்துடன் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
அதனை தொடர்ந்து அங்கு வந்த சிலர் மது போதை தலைக்கு ஏற தாம் கொண்டு வந்திருந்த கஞ்சா, ஐஸ் போன்ற போதை பொருளையும் நுகர தொடங்கி கடும் போதையில் ஆட்டம் போட்டுள்ளனர்.
ஹோட்டலில் மதுபானம் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும், ஆனாலும் அங்கு வந்த பலரும் தம் வசம் போதைப்பொருளை வைத்திருந்ததாக விருந்தில் கலந்து கொண்ட சிலர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான கலாசார சீரழிவு நிகழ்வுக்கு ரில்கோ ஹோட்டல் துணை போனமை தொடர்பில் பலரும் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.