யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சட்டத்தரணி சுவாஸ்திகா உரையாற்ற இருந்த நிலையில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒருசிலரின் தீர்மானத்தால் இறுதி நேரத்தில் அவரது உரை இரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து சட்டத்தரணி சுவஸ்திகா மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையில் தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே இன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன்போது ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாட மாணவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதற்கு சாதகமான பதில் கிடைக்காத நிலையில் மாணவர்களால் பிரதான நுழைவாயில் மூடப்பட்டு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.