காஸாவில் ஹமாஸ் பாராளுமன்றத்தை இஸ்ரேல் இராணுவம் நேற்று கைப்பற்றியது.
காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தினர்.
அதன்பின் தரை வழியாகவும், வான் வழியாகவும், இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலியர்கள் 1,200 பேரை சுட்டுக் கொன்றதுடன், 239 பேரை பணயக் கைதிகளாக கடத்தி சென்றனர்.
இதனையடுத்து இஸ்ரேல் இராணுவமும் எதிர் தாக்குதலை நடத்தியது. கடந்த ஒரு மாதக் காலமாக நடந்துவரும் தாக்குதலில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
காஸா எல்லையில் பீரங்கி வாகனங்களுடன் காத்திருந்த இஸ்ரேல் இராணுவம், காஸாவின் வட பகுதியில் கடந்த மாதம் 27ஆம் திகதி ஊடுருவியது.
இஸ்ரேல் விமானப்படை ஹமாஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்களில் குண்டு மழை பொழிய, இஸ்ரேல் தரைப்படை படிப்படியாக முன்னேறி, ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றி வந்தது.
காஸாவின் மருத்துவமனைகளில் பதுங்கியிருந்த ஹமாஸ் தீவிரவாதிகளையும் இஸ்ரேல் இராணுவத்தினர் கொன்றனர். காஸாவில் உள்ள முக்கிய வைத்தியசாலையான அல்-குத் வைத்தியசாலைக்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த ஹமாஸ் தீவிரவாதிகள் 24 பேரை இஸ்ரேல் இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த பாராளுமன்ற கட்டிடத்தையும், இஸ்ரேல் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
காஸாவின் வடபகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து முக்கிய பகுதிகளும் இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.