30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்து, வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியில் புரட்சிசெய்த மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைப்பது தேசிய குற்றமாகும் – என்று இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“முன்னாள் ஜனாதிபதி (கோட்டாபய ராஜபக்ச), முன்னாள் பிரதமர் (மஹிந்த ராஜபக்ச) உள்ளிட்டவர்களே பொருளாதார வீழ்ச்சிக்கு பொறுப்புக்கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு கவலையளிக்கின்றது.
இந்நாட்டில் உரத்தை இலவசமாக வழங்கிய தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. எனினும், சில அதிகாரிகளின் ஆலோசனையால் உர விடயத்தில் கோட்டாபய ராஜபக்ச தவறான முடிவை எடுத்தார்.
கொரோனா நெருக்கடி ஏற்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் காத்திரமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதற்கு சிறந்த தலைமைத்துவத்தை கோட்டாபய ராஜபக்ச வழங்கினார்.
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால் அது தேசிய குற்றமாகும். 30 வருடகால போரை அவர்தான் முடிவுக்கு கொண்டுவந்தார்.
வடக்கில் வீதி, பாலம், பாடசாலை, வைத்தியசாலை என அபிவிருத்தியில் புரட்சி செய்தார். இன்று வடக்கு, கிழக்கு மக்கள் தெற்கு மக்களுடன் இணைந்து செயற்படுகின்றனர்.