Home உலகம் நாட்டில் கிறிஸ்தவத்தை பரப்புவதற்கு நான் சிறந்த ஜனாதிபதியாக இருப்பேனா?

நாட்டில் கிறிஸ்தவத்தை பரப்புவதற்கு நான் சிறந்த ஜனாதிபதியாக இருப்பேனா?

by Jey

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் எதிர்வரும் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் குடியரசு கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு, அக்கட்சியின் தலைவர்களிடையே கடும் போட்டி உள்ளது.

அந்த வகையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டொனால்டு டிரம்ப், மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்து, கட்சியினரிடையே ஆதரவு திரட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதேபோல் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டி களத்தில் தென்கரோலினா முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிங், நியூஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி ஆகியோரும் உள்ளனர்.

இந்நிலையில் விவேக் ராமசாமி அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பலரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது அவரிடம், “அமெரிக்காவை நிறுவியவர்களின் மதம் வேறு. உங்கள் மதம் வேறு. எனவே, நீங்கள் அமெரிக்க அதிபராக இருக்க முடியாது என்று கூறுபவர்களுக்கு உங்கள் பதில் என்ன?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த விவேக் ராமசாமி, “நான் ஒரு இந்து. நான் என் அடையாளத்தை போலியாக காட்ட மாட்டேன். இந்து மதமும், கிறிஸ்தவமும் பொதுவான ஒரே மதிப்பைப் பகிர்ந்து கொள்கின்றன.

எனது மத நம்பிக்கையின் அடிப்படையில், ஒவ்வொரு நபரும் ஒரு காரணத்திற்காக இங்கே இருக்கிறார்கள் என்றும், அந்த காரணத்தை நிறைவேற்றுவது நமது தார்மீகக் கடமை என்றும் நான் நம்புகிறேன்.

ஏனென்றால் கடவுள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார். கடவுள் நம் மூலம் பல்வேறு வழிகளில் செயல்பட்டாலும், நாம் அனைவரும் சமம். இந்த நாட்டில் கிறிஸ்தவத்தை பரப்புவதற்கு நான் சிறந்த ஜனாதிபதியாக இருப்பேனா? என்றால் இல்லை, அதற்கு நான் சரியான தேர்வாக இருக்க மாட்டேன்.

ஆனால் எந்த மதிப்புகளின் மீது அமெரிக்க நாடு நிறுவப்பட்டதோ, அவற்றின் பக்கம் நான் நிற்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

related posts