சூயெஸ் கால்வாய் வழியாகச் செல்வதைத் தவிர்க்கப் போவதாக மேலும் 2 பெரிய வணிகக் கப்பல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஏமனின் ஹௌதி கிளர்ச்சிக் குழு செங்கடலில் செல்லும் வணிகக் கப்பல்களைத் தாக்குவதால் Mediterranean, CMA CGM ஆகிய நிறுவனங்கள் இந்த முடிவை அறிவித்துள்ளன.
செங்கடல் பிரச்சினை காஸா போர் பரவும் அபாயத்தை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே Maersk, Hapag-Lloyd ஆகிய நிறுவனங்கள் சூயெஸ் கால்வாய் வழி செல்லப்போவதில்லை என்று அறிவித்திருந்தன.
MSC Palatium III கப்பல் செங்கடலின் தெற்குப் பகுதியில் சென்ற வெள்ளிக்கிழமையன்று (15 டிசம்பர்) ஆளில்லா வானூர்தியால் தாக்கப்பட்டது.
காஸாவில் நடைபெறும் போருக்குப் பதிலடியாக அந்தப் பக்கமாகச் செல்லும் கப்பல்களைத் தாக்கப்போவதாக ஹெளதி கிளர்ச்சிக் குழு எச்சரித்திருக்கிறது.
சரக்குக் கப்பல்கள் மீது அதிகரித்திருக்கும் தாக்குதல்களால், கப்பல் நிறுவனங்களின் போர்க்காலக் காப்புறுதிச் சந்தாக் கட்டணங்கள் வெகுவாகக் கூடியிருக்கின்றன.