நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளிடையான இன்றைய ரி-20 போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பின் ஆலன் மற்றும் கான்வே நிதானமான ஆட்டத்துடன் ஓட்டங்களை குவித்தனர். பின் ஆலன் ஆட்டமிழந்ததும் ரச்சின் ரவிந்தரா, கான்வேவுடன் இணைந்தார். இருவரும் பந்துவீச்சை சிதறடிக்க அணியின் ஓட்ட வேகம் அதிகரித்தது.
அதிரடியாக விளையாடிய ரச்சின் 35 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய கான்வேவும் 63 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 215 ஓட்டங்களை எடுத்தது.
இதன்படி, 216 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் அவுஸ்திரேலியாவின் ட்ராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் இணை களமிறங்கியது. ஆனால், குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், அணித்தலைவர் மிட்சல் மார்ஷ நிதானமாக பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டார்.
மறுபுறம் நம்பிக்கையுடன் ஆடி வந்த வார்னர், சாண்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து களமிறங்கிய கிளேன் மேக்ஸ்வெல் 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.ஆனால், அணித்தலைவர் மிட்சல் மார்ஷ் அரைசதம் அடித்து களத்திலிருந்தார்.
இறுதியில், 9 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில், டிம் டேவிட் அதிரடியாக சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தின் திசையை மாற்றினார்.இறுதி பந்தில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெற வைத்தார் டிம் டேவிட்.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் 72 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த மிட்சல் மார்ஷ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.