எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்தாலோசனையொன்றை நடத்த பசில் ராஜபக்ச இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன பெரமுண கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் பலரின் வேண்டுகோளுக்கு அமையவே அவர் விரைவில் நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுஜன பெரமுண கட்சியை உருவாக்கிய பசில் ராஜபக்ச, கடந்த டிசம்பர் தொடக்கம் அரசியல் செயற்பாடுகளை விட்டும் தவிர்ந்து அமெரிக்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் கட்சியின் மூத்த அரசியல்வாதிகளை ஒதுக்கிச் செயற்படும் நாமல் ராஜபக்சவின் நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சிக்குள் எழுந்துள்ள பிளவுகள் தொடர்பில் பசில் நேரடியாக தலையிட்டு தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் பலரும் வலியுறுத்தியிருந்தனர்.
அதனையேற்று நாடு திரும்பவுள்ள பசில் ராஜபக்ச, எதிர்வரும் இரண்டொரு வாரங்களுக்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேரடிக் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தவுள்ளார்.