நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆணி 287 ரன்கள் விளாசி, டி20 வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோர் படைத்துள்ளது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி சென்னையில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
இதில், சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
அந்த வகையில் 30-வது லீக் ஆட்டம் நேற்று (ஏப். 15) பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது.
முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் மார்ச் 27-ம் தேதி நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்களை குவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் சாதனையை படைத்திருந்தது.
தற்போது தனது ரெக்கார்டை தானே முறியடித்து நேற்றைய ஆட்டத்தில் 287 ரன்கள் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
ஆனால், ஆடவர் டி20 வரலாறு என கணக்கிடும் போது, சர்வதேச போட்டிகள், உள்ளூர் டி20 போட்டிகள், ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் என அனைத்தும் உள்ளடக்கப்படும்.
அந்த வகையில், நேற்றைய ஆட்டத்தில் 287 ரன்கள் விளாசி ஆடவர் டி20 வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை எடுத்து, புதிய சாதனையை படைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
இதேபோல், சீனாவில் கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் மங்கோலிய அணிக்கு எதிராக நேபாள அணி 3 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்களை எடுத்தது. இதுவே டி20 வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.